மசூதிகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு | பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

96

நியூசிலாந்தில் அடுத்தடுத்து 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லே பூங்கா அருகே புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 300க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்முடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே , கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மற்றொரு மசூதியிலும், மருத்துவமனை வாசலிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தில் குவிந்த போலீசாருக்கும், மர்மநபர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ,பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க வந்த வங்க தேச வீரர்கள் மசூதியில் இருந்ததாகவும், அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றதாகவும் தகவல் வந்துள்ளது. இதனை அந்த அணி வீரர்களும் டிவிட்டர் மூலம் உறுதி படுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தாங்கள் காப்பாற்றப்பட்டதை அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலியாக நியூசிலாந்து – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.