லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை..!

154

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய ஊழல் தடுப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம், முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதற்கும் தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதனையடுத்து, திருத்தப்பட்ட மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 26-ம் தேதி முதல் புதிய ஊழல் தடுப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த மசோதாவின்படி, பொது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.லஞ்சம் கொடுக்குமாறு நிர்ப்பந்தத்துக்கு உள்ளானவர்கள், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளிடம் 7 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால், எந்த சிக்கலும் வராது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பொது ஊழியர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், வங்கி பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த சட்டத்தில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.