நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!

207

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் திருகொடிப்பட்டம், கோயில் யானை காந்திமதி மேல் வைத்து வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, திருக்கொடி கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் சப்பரத்தில் கொடிமரத்தின் முன்பாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன். கோயிலை சுற்றி அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது