பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நெல்லை மாவட்டம் முதலிடம்..!

295

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நெல்லை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மாநிலத்தில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 11 ஆயிரத்து 625 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2017-ம் ஆண்டில், 10 ஆயிரத்து 677 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபி சார்பிலும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மாவட்ட அளவில் ஆய்வு செய்யும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் நெல்லை மாவட்டம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்தது. நடப்பு 2018-ம் ஆண்டு தொடங்கிய முதல் 4 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை, விழுப்புரம் , தூத்துக்குடி மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.