நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு …!

435

கந்துவட்டி கொடுமையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே, திடீரென தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், காசிதர்மம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரம் வரை பணம் செலுத்திய பிறகும், கடன் கொடுத்தவர் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்தநிலையில், இசக்கிமுத்து அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி தொடர்பாக மனு அளித்தனர். 4 முறை மனு அளித்தும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த இசக்கிமுத்து, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திடீரென ஆட்சியர் வளாகத்திலேயே தீக்குளித்தனர். பலத்த காயம் அடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.