நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

348

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, சிபிஎஸ்இ, 196 கருணை மதிப்பெண்கள் வழங்கி, 2 வாரத்தில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கருணை மதிப்பெண் வழங்கி, புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கி, 2 வாரத்தில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட சிபிஎஸ்இ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடும் வரை மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், புதிய தரவரிசை பட்டியல் வெளியானால், மருத்துவ இடம் கிடைத்தவர்கள் நிலை கேள்விக்குறியாகும் என்று கூறப்படுகிறது.