நீட் தேர்வுக்கு எதிராக 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்..!

357

நீட் தேர்வுக்கு எதிராக, வரும் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கி.வீரமணி, திருநாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், நீட்டுக்கு எதிரான பொதுக்கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் அதை மீறியிருப்போம் என்று கூறினார். போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடாது என்று தான் உச்சநீதிமன்றம் கூறியதாகவும், பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.பொதுக்கூட்டத்திற்கு தடை போட்டது மாநில காவல்துறை தான் என்று கூறிய மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர்கள் புகார் கொடுத்து, திட்டமிட்டு செய்த சதி வேலை என்றும் குற்றஞ்சாட்டினார்.

நீட் தொடர்பான மசோதாக்கள் என்ன ஆனது? நீட்டுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய உறுதி மொழி என்ன ஆனது? கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்குகளில் போடுவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என பாஜக தலைவர்களுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து, இரண்டாம் கட்டமாக, வரும் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.