நீட் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை..!

256

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் தேர்வில், தமிழ் வழி வினாத்தாளில் ஏற்பட்ட மொழி மாற்ற குளறுபடியால், தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும், 196 கருணை மதிப்பெண் தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய தரவரிசை பட்டியலை, இரண்டு வாரங்களில், சி.பி.எஸ்.இ., வெளியிட வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை அடுத்து, அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.