நீட் கருணை மதிப்பெண் – அதிரடி உத்தரவு

350

நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் குளறுபடியின் காரணமாக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தமிழ் தேர்வில் தவறுதலாக கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் நிலை உருவாகும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வினாத்தாளில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட வினாக்களையே இறுதியாகக் கொள்ள வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தரப்பில் வாதாடப்பட்டது.

இதனையடுத்து, நீட் தேர்வுக்கும், மருத்துவப் படிப்புக்கும் ஆங்கிலம்தான் மிகவும் முக்கியம் என்னும் பட்சத்தில், மாணவர்களுக்கு மாநில மொழியில் தேர்வு நடத்துவது எதனால்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் எதிர்காலத்தில் தவறு நேராத வகையில் இருப்பதற்கான தீர்வுகளை சிபிஎஸ்இ மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது என்று திட்டவட்டமாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.