மத்திய அரசை கண்டித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் !

277

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நெடுவாசல் கிராமத்தை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன..இதனையடுத்து, மத்திய மாநில அரசுகள் அளித்த உறுதியை ஏற்று 22 நாள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி கொள்வதாக நெடுவாசல் போராட்டக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுவாசல் கிராம மக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மீண்டும் இன்று முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வாக்குறுதியை மீறி மத்திய மாநில அரசுகள் நம்பிக்கை துரோகம் செய்ததே போராட்டத்தை கையில் மீண்டும் எடுக்க காரணம் என்று நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு திட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நடைபெறும் என்று நெடுவாசல் போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். காவல் துறையினரின் அனுமதியை மீறி ஏராளமான பெண்களும், இளைஞர்களும் போராட்டத்தில் குதித்திருப்பது நெடுவாசல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.