அரசியல் கட்சிகளுடன் சட்ட ஆணையம் இன்று ஆலோசனை..!

164

நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் டெல்லியில் சட்ட ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள சட்ட ஆணையம் 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சிபாரிசு செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுடன் டெல்லியில் உள்ள லோக்நாயக் பவனில் சட்ட ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.