நடிகர் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை………. நடிகர் சங்கத்தலைவர் நாசர் உள்ளிட்டோர் எச்சரிக்கை.

388

நடிகர் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் உள்ள நடிகர் சங்க அலுவலகம் முன்பு துணை நடிகர், நடிகைகள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். இதைக்கண்டித்து நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தவுடன் மூத்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி வசதிகள் உள்ளிட்ட நன்மைகளை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்ட கண்காணிப்புக்குழு அமைப்பு, நட்சத்திர கிரிக்கெட் நடத்தி சங்கத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில், சிலர் திட்டமிட்டு நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு சீர்குலைக்க முயற்சிப்பவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும் என்று கூறியுள்ள அவர்கள், சங்கத்தின் மீது அரசியல் சாயம் பூசப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசோடு இணைந்து செயல்படுவது அவசியம் எனக்கூறியுள்ள அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் என்றென்றும் கடமைப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்க கைகளால் நடிகர் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் தருணத்துக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சுயநலத்துக்காக செயல்பட்ட உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்ய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் சங்க நிர்வாகிகள், இதற்காக
சங்க அவசர செயற்குழு கூட்டம் உடனடியாக கூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியவர்களின் தூண்டுதல் காரணமாக நடைபெற்ற சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.