காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நாமக்கல் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குமாரபாளையத்தில், காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மணிமேகலை வீதி, கலைமகள் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 30 மேற்பட்ட குடும்பத்தினரை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆசியா மாரியம், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தார். பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்த அவர், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காவிரி கரையோரம் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளம் சூழ்ந்தது.

வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதால், பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. போலீசார் எந்த நேரமும் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள அனல் மின்நிலையத்தில் உள்ள 4 யூனிட்களில் 50 மெகாவாட்டும், சுரங்க மின்நிலையத்தில் உள்ள 4 யூனிட்களில் 200 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதேபோன்று நீர்தேக்க மின்நிலையங்களான செக்கானூர், நெருஞ்சிபேட்டை, குதிரைக்கால் மேடு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்தேக்க மின்நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 180 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நமது செய்தியாளர் தனபால சுப்பிரமணியன் தரும் தகவல்களை இப்போது காண்போம்.