இலங்கை அரசின் நல்லெண்ண நடவடிக்கை : 2-ஆம் கட்டமாக 15 தமிழக மீனவர்கள் விடுதலை..!

386

இலங்கை சிறையில் இருந்து நல்லெண்ண நடவடிக்கையாக, இரண்டாம் கட்டமாக மேலும் 15 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை, கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்ற உத்தரவின்பேரில், யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்று, நல்லெண்ண அடிப்படையில், முதற்கட்டமாக 77 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று மேலும் 15 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மீனவர்கள் 15 பேரும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இன்னும் 4 தமிழக மீனவர்கள் மட்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.