நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த 44 மாவட்டங்களுக்கு ரூ.11,725 கோடி ஒதுக்கீடு! மத்திய அரசு நடவடிக்கை!!

191

புதுடெல்லி, ஜூலை. 25–
நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த 44 மாவட்டங்களுக்கு ரூ.11,725 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்தொகையை கொண்டு அபிவிருத்தி பணிகள் போர்க்கால அவசரத்துடன் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் மொத்தம் 683 மாவட்டங்கள் உள்ளன. இதில் 106 மாவட்டங்கள் மாவோயிஸ்டு வன்முறைக்கு அடிக்கடி இலக்காகும் மாவட்டங்கள் என அரசு கண்டறிந்துள்ளது. இந்த மாவட்டங்கள் பீகார், ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஒடிசா, மராட்டியம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய 10 மாநிலங்கள் உள்ளன.
1,04,000 வீரர்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கையில் 90 பட்டாலியன்கள் (படைப்பிரிவுகள்) ஈடுபடுத்தப்பட்டிருந்தன. பா.ஜ.க. ஆட்சியில் இதன் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. ஒரு பட்டாலியனில் சுமார் 1,000 வீரர்கள் இருப்பார்கள். மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கையில் 1,04,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி செந்தாழ்வாரம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த 106 மாவட்டங்களின் பட்டியலில் உள்ள 20 மாவட்டங்களில் நக்சல் வன்முறை ஓரளவு குறைந்துள்ளது என்று புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களை செந்தாழ்வார பட்டியலிலிருந்து நீக்க அரசு உத்தேசித்துள்ளது. எனினும் இது எளிதானதல்ல. அதுமட்டுமல்லாமல் உடனடியாக இதை அமலாக்குவதும் கடினம். ஏனெனில் மேற்கு வங்காளத்தில் உள்ள சில மாவட்டங்களில் நக்சல் வன்முறை குறைந்துள்ள போதிலும் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்பதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார்.
161 பேர் பலி
மாவோயிஸ்டு தாக்குதலின் உக்கிரம் குறைந்துள்ளது என்று பொதுவாக கூறப்பட்டாலும் புள்ளி விவரங்கள் இதை உறுதிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 592 நக்சல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 120 பேர் பலியானார்கள். நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 605 நக்சல் தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் 161 பேர் பலியானார்கள்.
செந்தாழ்வார பகுதியில் 762 காவல் நிலையங்கள் உள்ளன. 20 மாவட்டங்கள் நீக்கப்பட்டால் செந்தாழ்வாரப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களின் எண்ணிக்கை 620 ஆக குறைந்துவிடும்.
செந்தாழ்வாரப் பகுதியில் இடம் பெற்றுள்ள 44 மாவட்டங்களில் நக்சல் வன்முறை உக்கிரமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகளை போர்க்கால அவசரத்துடன் மேற்கொள்ள மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
வேலைவாய்ப்பு
அதிக அளவில் மாவோயிஸ்டு பாதிப்புக்கு இலக்காகியுள்ள 44 மாவட்டங்களில் ரூ.11,725 கோடியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தேசித்துள்ளது. வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதுமான வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் மாவோயிஸ்டு பாதைக்கு செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இப்பின்னணியில்தான் மேம்பாட்டு பணிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்பட்டுள்ளது. இந்த 44 மாவட்டங்களில் 5,412 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படும். 126 பாலங்கள் கட்டப்படும். மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் அமலாக்கப்படும்.