மாணவர்களிடையே சகிப்பின்மை, காழ்ப்புணர்ச்சிக்கு பல்கலைக்கழகங்கள் இடமளிக்கக்கூடாது. நாலந்தா பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் அறிவுறுத்தல்.

223

மாணவர்களிடையே சகிப்பின்மை, காழ்ப்புணர்ச்சி மற்றும் வெறுப்பு ஆகியவற்றுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக்கக்கூடாது என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் பழமையான நாலந்தா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று முடித்த மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகளாக நற்சிந்தனையையும், கலாச்சாரத்தையும் நாலந்தா பல்கலைக்கழகம் பிரதிபலித்து வந்ததை சுட்டிக்காட்டினார்.
அன்றைய காலகட்டங்களில், நட்பு, ஒத்துழைப்பு, விவாதம், கலந்துரையாடல் ஆகியவற்றுக்கான களங்களாக இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இருந்ததாக குடியரசு தலைவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குரிய இடமாக உயர் கல்வி நிறுவனங்கள் திகழ வேண்டும் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, பேச்சுரிமை, விவாதத்துக்கான களங்களாக பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் விளங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.