தமிழக ஆளுங் கட்சியின் பிரதிநிதியாக புதிய ஆளுநர் செயல்பட கூடாது -முத்தரசன்!

345

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலாலுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக தலைவர்கள், நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறுப்புகளை புதிய ஆளுநர் நடுநிலையோடு நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஓராண்டாக பொறுப்பு ஆளுநர் மட்டுமே இருந்ததால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல் சூழ்நிலையையும் ஆளுநர் நியமனத்தையும் இணைத்து பார்க்கக் கூடாது என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதிய ஆளுநர் நியமனம் தமிழக அரசியல் சூழ்நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் கருத்து கூறியுள்ளார்.
தமிழக ஆளுங் கட்சியின் பிரதிநிதியாக புதிய ஆளுநர் செயல்பட கூடாது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசியல் சூழ்நிலையில் புதிய ஆளுநரின் பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து இருப்பதாக, தமாகா தலைவர் வாசன் குறிப்பிட்டுள்ளார்.