முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

73

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை உடனடியாக விவாகரத்து செய்யும் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம், கடந்த ஆண்டு செப்டம்பரில் பிறப்பிக்கப்பட்டது. ஒரு முறை அவசரச் சட்டம் இயற்றப்பட்டால், 6 மாதங்களில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று அதை சட்டமாக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும். இதற்கு நடுவே, நாடாளுமன்றம் கூடினால் 42 நாள்களில், அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத் தொடரில், முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா, மக்களவையில் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்காததால், மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த அவசரச் சட்டம், வரும் ஜனவரி 22-ஆம் தேதியுடன் காலாவதியாகிவிடும். இதனையடுத்து, முத்தலாக் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.