முஸ்லிம் ஆசிரியை விரட்டப்பட்டார் ரம்ஜான் விழா நடத்திய பள்ளிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு! அரியானாவில் சிறுபான்மையினர் கொந்தளிப்பு!!

140

சண்டிகார், ஜூலை. 24–
அரியானாவில் உள்ள தாரு நகரில் கிரீன் டேல்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு ரம்ஜான் விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து இப்பள்ளிக்கு பஞ்சாயத்தார் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர். நெருக்கடி கொடுக்கப்பட்டதையடுத்து முஸ்லிம் ஆசிரியை டெல்லிக்கு சென்றுவிட்டார். இவ்விவகாரம், சிறுபான்மையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் பல்வேறு கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்று கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
கட்டார்
இப்பின்னணியில்தான் வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன என்று கூறப்படுகிறது. அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். அவர் ஜாட் சமூகத்தை சாராதவர்.

இந்நிலையில், தாரு நகரில் உள்ள கிரீன் டேல்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளிக்கூடத்தில் இம்மாதம் 6–ந் தேதி ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. மேவத் மாவட்டத்தில் உள்ள தாரு நகர், குர்கானில் இருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது. ரம்ஜான் விழாவின் போது நமாஸ் செய்யுமாறு இந்து மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாயத்தார் கூடி பேசி அதிரடி அறிவிப்புகளை அறிவித்தனர். மேலும், இந்துக்களை முஸ்லிம்களாக மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை கண்டிப்பதாகவும் பஞ்சாயத்தார் அறிவித்தனர். பள்ளிக்கூடத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் பஞ்சாயத்தார் கட்டளையிட்டனர்.
கட்டப்பஞ்சாயத்து
முஸ்லிம் ஆசிரியையும், இஸ்லாமிய மாணவர்களையும் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்க வேண்டும் என்று பஞ்சாயத்தார் கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது. பஞ்சாயத்தார் கொடுத்த நெருக்கடியை அடுத்து முஸ்லிம் ஆசிரியை வேலையை உதறிவிட்டு டெல்லிக்கு சென்றுவிட்டார். உண்மையில் இது பஞ்சாயத்து கிடையாது. இது கட்டப்பஞ்சாயத்துதான் விமர்சனம் எழுந்துள்ளது.
தாரு நகரை முனிசிபாலிட்டி (நகர சபை) உறுப்பினர்கள்தான் நிர்வகித்து வருகின்றனர். எனவே பஞ்சாயத்தாருக்கு இங்கு இடம் கிடையாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரம்ஜானையொட்டி விருந்து மற்றும் விழா நடைபெற்றதே தவிர நமாஸ் செய்யுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று பள்ளிக்கூட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நமாஸ்
தாரு நகரில் நடைபெற்ற நிகழ்வை ஊதி பெரிதாக்கிவிட்டனர். இதனால்தான் மாநிலம் முழுவதும் வதந்தி, காட்டுத் தீயாக பரவிவிட்டது என்று கூறப்படுகிறது. எனினும் இவ்விவகாரம் சிறுபான்மையினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்திய தேசிய லோக் தள எம்.எல்.ஏ. சவுத்ரி ஜாகீர் உசேன், ‘ரம்ஜானையொட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட விழாவுக்கு அநாவசியமாக மதச்சாயம் பூசி விட்டனர். நமாஸ் நடத்துமாறு யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. பஞ்சாயத்தார் என யாரும் கிடையாது. அப்படி ஏதேனும் அமைப்பு இருப்பதாக யாரேனும் சொன்னால் அது தவறானது’ என்று கூறியுள்ளார்.