மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை, காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் பெற்றுள்ளது..!

684

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் முதன்மை வகிப்பது பட்டுப் புடவைகள்தான் இந்த பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம். இத்தகைய பட்டுப் புடவைகளை பார்த்தாலே அதன் தரத்தை உணர்ந்து கொள்ளலாம். உரிய தரத்தில், பாரம்பரிய கலை வடிவில், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பட்டு நூல்களைக் கொண்டு, கைகளால், பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டுப் புடவைகளுக்கு, இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில், தனிப் பெருமை உள்ளது.
இந்த நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2016-ம் ஆண்டு நெசவாளர்களுக்கான தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல் பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் இந்த முருகன் பட்டு கூட்டுறவு சங்கம்.
இந்த பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருந்து, பட்டுப் புடவைகளை நெசவு செய்து கொடுக்கின்றனர். இந்நிலையில், 2016-ம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர், சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய தரச் சான்றிதழ், மற்றும் சிறந்த கைத்தறி துணி விற்பனை தரச் சான்றிதழ் என மூன்று விருதுகள் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த நெசவாளருக்கான விருது முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற நெசவாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய நற்சான்று விருதுக்கு நாடு முழுவதும் 19 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பார்வதி என்பவரும் இந்த விருது கிடைத்துள்ளது.
இத்தனை விருதுகளையும் தட்டிச் சென்ற முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய நற்சான்று விருது வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது பட்டு, அந்த பட்டுக்கு பெருமை சேர்த்திருப்பது முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் என்றால் அது மிகை ஆகாது…
கைத்தறி துணிகளை உடுத்துவோம்…. நெசவாளர்களை வாழ வைப்போம்…