வரலாறு படைக்கும் இஸ்ரோ!

23597

நீர்வள மேம்பாடு, காடுகள் அழிக்கப்படுவதைக் கண்காணித்து தடுத்தல், மக்கள் குடியிருப்புகளைத் திட்டமிட்டு செம்மைப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி௩௪ ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் ௨௦ செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ முதன்முதலாக 1993–ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஐ.ஆர்.எஸ். ௧இ என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. அது தோல்வியில் முடிந்தது. அதற்கு பிறகு அனுப்பிய அனைத்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ௩௬–வது வரிசை ராக்கெட் ஆகும்.
2008–ம் ஆண்டு முதல் முறையாக ஒரே நேரத்தில் ௧௦ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்த இஸ்ரோ, இப்போது ஒரே நேரத்தில் ௨௦ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த ௨௦ செயற்கைக்கோள்களில் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த ௧௭ செயற்கைக்கோள்களும் அடங்கும். இதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் ௧௩ சிறிய ரக செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி௩௪ சுமந்து சென்றுள்ளது. இந்த ராக்கெட் சுமந்து சென்ற முதன்மை செயற்கைக்கோள் கார்டோசாட் ௨. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ளும்.
வெற்றிகரமாக இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்காலங்களில் ஏராளமான விண்வெளி திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு இந்த ராக்கெட்டின் வெற்றிப்பயணம் ஒரு அச்சாரம் ஆகும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். ௨௦ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் உலகத் தரத்திலான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வசதியையும் இஸ்ரோ பெற்றுள்ளது.
இந்தச் சாதனைகளோடு இஸ்ரோ தனது பயணத்தை நிறுத்திவிடாது. இனி வருங்காலங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளியில் பல வித்தியாசமான திட்டங்களை நிறைவேற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக எத்தனை சவால்களையும் சந்திக்க இந்திய விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர் என்று இந்திய விஞ்ஞானி குன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தொடர்ந்து வரலாறுகளை படைத்து வரும் இஸ்ரோ வருங்காலங்களிலும் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் என்பதில் ஐயமில்லை. செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் செலவுகளை குறைக்க இஸ்ரோ தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
அடுத்த ௫ ஆண்டுகளில் ௭௦ செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யாவை மிஞ்சும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பயணம் தொடரும். இதில் இந்திய விஞ்ஞானிகள் புதிய வரலாற்றுச் சாதனை படைக்க வாழ்த்துவோம்.