கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்..!

780

கொட்டி தீர்க்கும் கனமழையால், மும்பை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மீட்பு பணிக்காக இந்திய ராணுவமும் வருகை புரிந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மும்பை பிரதான சாலைகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனங்கள் இயக்க முடியாமல் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் நிலையங்களில் சிக்கி தவித்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

அதிக மழை பெய்து வருவதால், விமான சேவையும் கடுமையாக நிலைகுலைந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால், அப்பகுதிமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீயணைப்பு துறையினருடன் முன்னதாகவே கடல்படையினர் இணைந்திருந்த நிலையில் ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் தற்போது சேர்ந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவி செய்யவும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் அம்மாநில முதலமைச்சர் தேவிந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.