மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

230

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மும்பையின் பரேல், தாராவி, மடுங்கா உள்ளிட்ட பகுதிகள், அருகில் உள்ள தானே, தோம்பிவாலி, கல்யாண், டைவா ஆகிய மாவட்டங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏராளமான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கு குர்லா பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 பேர் மீட்புப்படையினரால் மீட்கப்பட்டனர். 13 வீடுகள் மழையால் இடிந்து விழுந்துள்ள நிலையில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதிகபட்சமாக, கொலபாவில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நாக்பூரில் கனமழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். இதனிடையே வரும் 11 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.