மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு..!

79

மும்பையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 -ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க மகாரஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலம் ஒன்று நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தின் கீழே சென்றவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மேம்பாலம் இடிந்து விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும், மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை நடைமேம்பால விபத்து தன்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எண்ணியே எனது எண்ணங்கள் உள்ளதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.