முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க கேரள அரசுக்கு இடைக்கால தடை …!

754

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து, நவம்பர் 20ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறிய விலங்குகள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று தமிழக அரசு கூறியதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், முல்லைப்பெரியார் அணையின் கரையோரம் வாகன நிறுத்தம் அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக, கேரள அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.