முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசியல்வாதிகள் பலரும் அணையின் உறுதியை ஒத்துக் கொண்டனர்! நீதிபதி கே.டி.தாமஸ் கருத்தால் பரபரப்பு!!

329

திருவனந்தபுரம், ஜூலை. 29–
முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்பதை கேரள அரசியல்வாதிகள் பலரும் ஒத்துக் கொண்டனர் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இதனால் கேரளாவில் சர்ச்சை எழுந்துள்ளது.
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டில் உள்ள மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக உள்ளது. இந்த அணை வலுவிழந்துவிட்டது. இது உடைந்தால் லட்சக்கணக்கான மலையாளிகளின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படும் என்று கேரளாவில் பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
அணையின் உறுதித்தன்மையை பரிசோதித்து பார்த்து பரிந்துரை நல்க உயர் நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் கேரளா சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் இடம்பெற்றிருந்தார்.
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கே.டி.தாமஸ் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது, உறுதியாக உள்ளது என்பதை உம்மன்சாண்டி பி.ஜே.ஜோசப், ஆரியாடன் முகமது, என்.கே. பிரேமசந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஒத்துக் கொண்டனர் என்பதை கே.டி.தாமஸ் பதிவு செய்துள்ளார்.
கேரள அரசியல்வாதிகளின் பிரதான இலக்கு என்னவென்றால், 1886–ல் செய்து கொள்ளப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் கே.டி.தாமஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கேரள தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற தொனியில் கே.டி.தாமஸ் எழுதியுள்ளது, கேரள அரசியல்வாதிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம், கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயர்நிலைக்குழு முன் தமிழகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள், முல்லைப் பெரியாற்றில் உற்பத்தி செய்யப்படும் 50 சதவீத மின்சாரத்தை கேரளாவுக்கு அளிக்க தமிழ்நாடு தயாராக உள்ளது என்று தெரிவித்தனர் என்பதையும் கே.டி.தாமஸ் பதிவு செய்துள்ளார்.
1979–லிருந்து 3 கட்டமாக அணையை வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அணையின் உறுதித்தன்மை மேலும் வலுப்பட்டுள்ளது என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுவிட்டது என்பதையும் கே.டி.தாமஸ் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.