சமாஜ்வாடி கட்சியில் அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி | இணைந்து செயல்பட முலாயம், அகிலேஷ் முடிவு !

115

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் நிலவிய அதிகார போட்டிக்கு, முலாயம் மற்றும் அகிலேஷ் சந்திப்புக்கு பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான முலாயம் சிங்குக்கும், முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே நடைபெற்ற அதிகார போட்டி காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து அகிலேசுக்கு 99 சதவீத எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, சைக்கிள் சின்னம் அவருக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் சுதாகரித்துக் கொண்ட முலாயம் சிங், அகிலேசுக்கு பணிந்துள்ளார். மேலும், சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டால், அது மதவாத கட்சிக்கு வழிவகை செய்துவிடும் என்பதால், கட்சியை வலுப்படுத்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒற்றுமையாக தேர்தலை சந்தித்த இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், அகிலேஷ் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்றும் முலாயம்சிங் அறிவித்துள்ளார். இதையடுத்து இன்று அகிலேஷ் திடீரென முலாயம் சிங் யாதவை சந்தித்துப் பேசினார். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த பேச்சு வார்த்தையில் மனமாற்றம் ஏற்பட்டு சமரசமாக செல்ல இருவரும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.