உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்றால், அகிலேஷ் யாதவ் தான் அடுத்த முதலமைச்சர். சமாஜ்வாடி கட்சிப்பூசலை முடிவுக்கு கொண்டு வர முலாயம்சிங் யாதவ் இறுதிக்கட்ட முயற்சி.

166

வரும் சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் அடுத்த முதலமைச்சர் என்று முலாயம் சிங் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடியில் தந்தை முலாயம் சிங்குக்கும், அவருடைய மகனும், முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அக்கட்சியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டை சமீப காலமாக உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் அடுத்த முதலமைச்சர் என்று முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், சமாஜ்வாடி கட்சி ஒற்றுமையாக தான் உள்ளது என்று தெரிவித்தார். தங்களது கட்சியில் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறிய அவர், அகிலேஷ் யாதவுடன் எந்த பிளவும் இல்லை என தெரிவித்தார்.