முக்கொம்பு அணையில், தற்காலிக தடுப்பு சுவர் எழுப்பும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையின் 9 மதகுகள், கடந்த 22-ம் தேதி முற்றிலும் இடிந்து விழுந்தன. இதனை தற்காலிகமாக சரி செமதய்யும் பணியில் பொறியாளர்கள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் இரவு பகல் பாராமல் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் பைபர் படகில் சென்ற 2 ஊழியர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். இந்தநிலையில் முக்கொம்பு அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை தேக்கும் விதமாக, 5 லட்சம் மணல் மூட்டைகள் மற்றும் பாறாங்கற்களைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணியல் 800 ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருப்பதால், தற்காலிக தடுப்பு சுவர் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்த பணியில், தீயணைப்பு படை வீரர்கள், மீன்வளத்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அரசு மருத்துவ குழுவினரும் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.