காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு..!

408

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்திருப்பதை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீஃக்-ஏ-இன்சாஃப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான் கான் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியானதும் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்காண விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டத்தில் பேசிய மெகபூபா முப்தி, இம்ரான் கானின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்று பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேசமயம் இந்திய பிரதமர்களுக்கு காஷ்மீர் விவகாரம் சவாலானது என கூறிய அவர், வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு நட்புகரம் நீட்டியதை சுட்டிக்காட்டினார்.