வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி ஆய்வு..!

165

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

கடந்த இரு வாரங்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையின் காரணமாக கேரளாவில் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மொத்தமுள்ள 39 அணைகளில் 33 அணைகளிருந்து உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருவதால் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் என்னும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் உயிர் பலியின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கேரள மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்தநிலையில் கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்தார். அங்கு அவரை கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கும் நிலையில் பிரதமர் பார்வையிட்ட பிறகு நிதியுதவி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.