தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக, அசாமில் ஆய்வு நடத்தச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி-க்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் இறுதி வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வரும் நிலையில், அசாமில் தற்போது உள்ள நிலைமையை ஆய்வு செய்ய, திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 6 எம்பி-க்களும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர். சில்சார் வி்மான நிலையத்தை சென்றடைந்தவுடன், திரிணாமுல் எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை போலீஸார் தடுத்து, நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ,அசம்பாவிதங்களை தவிர்க்க தடுத்து நிறுத்தப்பட்டதாக அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், மக்களை சந்திக்க செல்வது தங்கள் ஜனநாயக கடமை என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், அசாமில் சூப்பர் எமர்ஜென்சி நிலைமை நிலவுவதாக ஆவேசமாக தெரிவித்தார். இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.