யாருக்கு அதிகாரம்? என்பதில் முதல்வர், ஆளுனர் இடையே போட்டி…

284

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடியின் தலையீடு உள்ளதாகவும், கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். மேலும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுனர் தலையிடக் கூடாது என்றும் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதனை மறுத்துள்ள துணைநிலை ஆளுனர் கிரண்பேடி, முதல்வர் செயல்பாடுகளால் மாநிலத்தில் வளர்ச்சி பாதிக்கும் என்றும், ஆளுனருக்கு அதிகாரம் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியும் எனவும் பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சரவையின் ஆலோசனையின்பேரில் தான் ஆளுனர் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுனர் கிரண்பேடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை எனவும் நாராயணசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை கிரண்பேடி வாங்க மறுத்ததோடு, இதுபோன்ற கடிதங்கள், பொறுப்பான முதலமைச்சரின் அலுவலகத்தின் பொறுப்புகளை தரம் தாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர், ஆளுனர் இடையே மோதல் முற்றிவருவதை அடுத்து, அரசுப்பணிகள் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.