மக்களின் எண்ணங்களை புரிந்துக்கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..!

283

மக்களின் எண்ணங்களை புரிந்துக்கொண்டு, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல், லால் பகதூர் சாஸ்திரி திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அகாடமி வளாகத்தில் நடைபெற்ற யோகா அமர்வுகளில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டார். அப்போது ஐஏஎஸ் பயிற்சி மேற்கொண்டு வரும் இளம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி யோகா செய்தார்.
இதனையடுத்து, பயிற்சி பெறும் ஐஏஎஸ் அதிகாரிகளின் குழந்தைகளுடன் பிரதமர் மோடி உற்சாகமாக கலந்துரையாடி மகிழ்ந்தார்.
இதனைத்தொடர்ந்து, அகாடமியில் நடைபெற்ற புதிய விடுதியை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, 200 மீட்டர் தொலைவிலான செயற்கை ஓடுதள பயிற்சி களத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர், அகாடமியில் பேசிய அவர், மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ள, நேரடியாக அதிகாரிகள் களப்பணியில் இறங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மக்களுக்கு பணிவிடை செய்வதையே குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, இந்திய பாரம்பரியத்தை உணர்ந்து, நாட்டின் மாண்பை காக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.