சமூகத்தின் மனசாட்சியாக ஊடகங்கள் விளங்குவதாக தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..!

350

சமூகத்தின் மனசாட்சியாக ஊடகங்கள் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, தினத்தந்தி பவளவிழா சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தமிழறிஞர் ஈரோடு தமிழன்பன், ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு ஆகியோருக்கு விருதுகளை வழங்கி பிரதமர் மோடி கௌரவப்படுத்தினார்.
இதை தொடர்ந்து தமிழில் வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது, பேசிய அவர், சமூகத்தின் மனசாட்சியாக பத்திரிக்கை துறையின் பேனா முனை விளங்குவதாக கூறினார். ஊடகங்கள் தங்களின் நம்பக தன்மையை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, பாமர மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் கருவியாக ஊடகங்கள் விளங்குவதாகவும் கூறினார். நாட்டின் நலனுக்காக பணியாற்றி வருவதை ஊடகங்கள் நினைவில் வைத்து கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன்,
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டனர். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சிவகுமார், சூர்யா, தனுஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.