பிரதமர் மோடி மீதான காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் புகார் அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

249

பிரதமர் மோடி மீதான காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் புகார் அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கடந்த ஒரு மாதமாக ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக கூறினார். ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தாம் பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்பதால் மத்திய அரசு தம்மை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். பிரதமர் மோடி குறித்த தனிப்பட்ட தகவல் தம்மிடம் இருப்பதாகவும், அதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க விரும்புவதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக ஆளுங்கட்சியே நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, போலித்தனங்களை விட்டுவிட்டு நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார். தவறான புகார்களை தெரிவித்தன் மூலம் நாட்டு மக்களிடம் ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அனந்த குமார் கூறினார்.