பிரதமர் மோடியுடன் கிர்கிஸ்தான் அதிபர் சந்திப்பு . தீவிரவாதத்தை எதிர்கொள்ள இணைந்து பணியாற்ற முடிவு

287

இந்தியா, கிர்கிஸ்தான் நாடுகளுக்கிடையே சுற்றுலா, வேளாண் மற்றும் உணவு தொழில், இளைஞர் மேம்பாடு மற்றும் ஒலிபரப்பு, மற்றும் ஒலி -ஒளி நிகழ்ச்சிகள் பரிமாற்றம் ஆகிய துறைகளில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

கிர்கிஸ்தான் அதிபர் அல்மாஸ்பெக் அதம்பயேவ், தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களுடன் 4 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அதம்பயேவ் நேற்று சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம், வேளாண்மை, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தைக்குப்பின் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் பொதுவான சவாலாக இருக்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் ஆகியவற்றிலிருந்து இளைஞர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அதிபர் அல்மாஸ்பெக் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் பயனடைவதற்காக இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக நெருங்கி, ஒருங்கிணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
திறன்வளர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். பொருளாதார உறவுகள் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, சுகாதார நலன், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், வேளாண், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறையில் இரு நாடுகளும் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக கிர்கிஸ்தான் அதிபர் அதம்பயேவிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.