புதிய கொள்கைகளை உருவாக்கி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அரசு செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

226

புதிய கொள்கைகளை உருவாக்கி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 8 செயலாளர்கள் குழு நிறைவேற்றியுள்ள பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். விவசாயம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் பணிகள் குறித்து அடுத்த மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பத்து செயலாளர்கள் கொண்ட புதிய குழு அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, செயலாளர் குழுக்கள் அனைத்தும் தங்களது பரிந்துரையில், நாட்டில் உள்ள 800 மில்லியன் இளைஞர்கள் முன்னேற்றம் பெற முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறிப்பிடத்தக்க துறைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்து செயலாளர் குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், இளம் அதிகாரிகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறினார். எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொண்டு, நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் செயலாளர்கள் குழுவுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.