டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி | முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்

323

70வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மூவண்ண கொடியை ஏற்றி வைத்தார்.
ஆங்கிலேயரின் அடிமைத் தளையில் இருந்து இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகிறது. அதன்படி, ஆகஸ்டு 15ம் நாளான இன்று, 70வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

சுதந்திர தினத்தை ஒட்டி காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செங்கோட்டையில் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, கோட்டை கொத்தளத்துக்கு சென்ற மோடி, மூவண்ண கொடியை ஏற்றி வைத்தார்.
21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பட்டொளி வீசிப் பறக்கும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.