நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி!

704

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், புதிய உறுப்பினர்களை அவைக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, மக்களவையில் புதிய உறுப்பினர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், பேசிய அவர், அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதல்முறையாக நாடாளுமன்றம் கூடியிருப்பதாக தெரிவித்தார். குளிர்கால கூட்டத்தொடர் தீபாவளி பண்டிகையின் போது தொடங்க வேண்டிய நிலையில், காலதாமதாக தற்போது தொடங்கி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இதனையடுத்து மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோன்று மாநிலங்களவையில் பேசிய அவைத்தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அரசு நிறைவேற்றும் திட்டங்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன்
வலியுறுத்தினார். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.