எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்..!

163

எரிபொருள் விலையைக் குறைக்காவிட்டால், மோடி மற்றும் எடப்பாடி அரசுகளை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் நடைபெறும் என கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும், எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தியும், சென்னை அண்ணா சாலையில் தாராபூர் டவர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, விசிக உள்ளிட்ட தொழிற்சங்களைச் சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துக்கொண்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட அனைவரையும் அப்புறப்படுத்தி, கைது செய்தனர்.