அஞ்சலக பேமண்ட் வங்கி திட்டத்தை இன்று மோடி தொடங்கி வைக்கிறார்..!

2086

இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகளை முடித்த அவர் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். மாநாட்டின் நிறைவாக பிம்ஸ்டெக் நாடுகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார். மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லி திரும்பினார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள டல்காட்டோரா விளையாட்டு அரங்கத்தில் அஞ்சலக பேமண்ட் வங்கித் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அதன்படி, இன்று ஒரே நேரத்தில் 650 பேமண்ட் வங்கிக் கிளைகளும், 3,250 சேவை மையங்களும் திறக்கப்பட இருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள கிளை அஞ்சலகங்களில் மத்திய அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். இந்த திட்டத்துக்காக ஆயிரத்து 435 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஒன்றரை லட்சம் அஞ்சலக கிளைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் பேமண்ட் வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் வங்கிச் சேவையில் அஞ்சலக பேமண்ட் வங்கிகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.