அண்டை நாடுகளுடனான உறவை இந்தியா பாதுகாக்கும் – மோடி

1515

நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மற்றும் வங்கதேச பிரதமர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேபாளம் சென்றார். இதையடுத்து அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிம்ஸ்டெக் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அண்டை நாடுகளுடனான உறவை இந்தியா எப்போதும் போற்றி பாதுகாக்கும் என்றார். பிம்ஸ்டெக் நாடுகள் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்திய உறுதி பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி மோடி, பிம்ஸ்டெக் நாடுகளை போலவே தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை பேணிக்காக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.