பாதிப்பு குறித்து முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

487

கேரளாவில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தனிடையே கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அங்கு அவரை அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இந்நிலையில் இன்று காலை கொச்சியில் பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கேரளாவில் மழை-வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

மேலும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து கொச்சி விமானப்படை தளத்தில் இருந்து ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருடன் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். இந்நிலையில் கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளா மக்களின் எதிர்காலத்தை காப்பது நம் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.