ருவாண்டா நாட்டுக்கு 1,400 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு..!

197

ருவாண்டா நாட்டுக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

5 நாள் பயணமாக 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, முதல்கட்டமாக ருவாண்டா தலைநகர் கிகாலி விமான நிலையத்தை சென்றடைந்தார். ருவாண்டாவில், பிரதமர் மோடிக்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து, ருவாண்டா அதிபர் பலால் ககாமே-வுடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, தோல் பொருட்கள் துறை மற்றும் வேளாண்மைத்துறையில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின்னர் பேசிய பிரதமர் மோடி, கிகாலி நகரில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழில் பூங்காக்களை அமைக்க 700 கோடி ரூபாயும், வேளாண் துறைக்காக 700 கோடி ரூபாயும் கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, ருவாண்டா-வில் இந்திய தூதரகம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை, விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார். இதனையடுத்து, உகாண்டாவுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, நாளை அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.