மகளிர் அதிகாரம் பெறுவதே அரசின் நோக்கம் என பேச்சு – பிரதமர் மோடி

256

நாட்டில் மகளிர் முன்னேற்றத்திற்காகவும் , அவர்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் இருந்தபடி, தனது நமோ மொபைல் செயலி மூலம், பிரதமர் மோடி, இலவச சமையல் எரிவாயு திட்ட பயனாளிகளுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சமையல் எரிவாயு திட்டப்பலன் பெற்ற மகளிர் பலர் பிரதமர் மோடியுடன் உரையாடினர். மகளிர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, மகளிர் முன்னேற்றம், அதிகாரம் பெறுவதே மத்திய அரசின் குறிக்கோள் என்று தெரிவித்தார்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம், வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 8 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். இந்த திட்டத்திற்காக கூடுதலாக 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, மகளிர் முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.