இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை ஒருசொட்டு கூட பாகிஸ்தானுக்கு தரமுடியாது. இண்டஸ் நதிநீர் இனி இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி.

185

இந்தியாவிற்கு சொந்தமான நதிநீரை பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அனுமதிக்க முடியாது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நதிநீரைப் பகிர்ந்து கொள்வதற்காக செய்துகொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் தொடர்புடைய சட்லஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகள் இந்தியாவுக்கு சொந்தமானவை என்று தெரிவித்தார். இந்த நதிகளின் நீரை பாகிஸ்தானுக்கு அளித்தாலும் அங்கு அவை விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தான் வழியாக நதிநீர் வீணாக கடலில் சேர்வதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவிற்கு சொந்தமான நீர், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு போதுமான அளவு கிடைக்கவேண்டும் என்று கூறினார். இண்டஸ் நதியின் நீரின் உரிமை விவசாயிகளுக்கு உண்டு என்று அவர் உறுதியளித்தார். இண்டஸ் நதிநீர் ஒப்பந்தம் குறித்து அலுவல்குழு செயல்பட்டு வருவதாக கூறிய பிரதமர் மோடி, இனி இந்த நதிநீரின் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் பாகிஸ்தான் வழியாக செல்வது நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். அந்த நீரானது பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கும், பிற மாநில இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.