எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி…!

251

தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊதிய உயர்வு தேவையா? என்பதை எம்எல்ஏக்கள் சிந்திக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் மற்றும் படி 55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கக்கோரி, மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது, எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுவில் சட்ட ரீதியான கருத்துகள் எதுவும் முன் வைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
வாதத்தின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் மக்கள் வறுமையால் வாடும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா என்பது குறித்து அவர்கள் தான் சிந்திக்க வேண்டும் எனக் கூறினர்.
தமிழகத்தில் வறட்சியால் நிலவும் வறுமை, விவசாயிகள் தற்கொலை, கல்விக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தசூழலில், ஊதிய உயர்வு அவசியமா என்று எம்எல்ஏக்கள் தங்களை தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர்.