திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்…

233

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ – ஏ.கே.போஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 69.

கடந்த 2016-ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.போஸ். மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்த இவர் நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஏ.கே.போஸின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் மக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 69 வயதான ஏ.கே.போஸ் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினகரன் தரப்பினரை அதிமுகவிலிருந்து நீக்கியபோது, ஏ.கே.போஸ் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் தினகரன் அணியிலிருந்து விலகி அதிமுகவிலேயே அவர் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், மதுரை மாவட்ட அதிமுக வின் மூத்த நிர்வாகியான ஏ.கே.போஸின் மறைவு அவரது குடும்பத்தினர், ஆதராவாளர்கள், கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஏ.கே.போஸ் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது. பிற்பகலுக்கு மேல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஏ.கே.போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.