கேரளாவிற்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

409

கேரள அரசின் கோரிக்கையை ஏற்று இரண்டாவது கட்டமாக ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக கேரளாவிற்கு தமிழகத்தை சேர்ந்த 10 பூச்சியல் வல்லுனர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். கேரள மாநிலத்தில் தமிழக மருத்துவ குழுவின் மூலம் 322 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 20 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கேரள மாநில முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரண்டாவது கட்டமாக 25 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை ஆங்காங்கே உள்ள கட்சியின் மாவட்ட குழுக்கள் சேகரித்து, கேரள மக்களுக்கு நேரில் சென்று வழங்கினர் எனவும் அவர் கூறினார்.